Monday 4 September 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 10

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
..மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
..பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
..பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
..எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


மாலாகி நான்முகனாய் மா பூதமாய்
..மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்
பாலாகி எண்திசைக்கும் எல்லையாகிப்
..பரப்பு ஆகிப் பரலோகம் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப்
..பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
ஏலாதன எல்லாம் ஏல்விப்பானாய்
..எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே


எழுகின்ற சுடரான எம்பெருமான் சிவன்,


1. திருமால், பிரமன் ஆனார்
2. ஐம்பெரும் பூதங்கள் ஆனார்
3. பெருக்கம் (பிறப்பு அல்லது வளர்ச்சி), சுருக்கம் (இறப்பு அல்லது தேய்தல்) ஆனார்
4. மகிழ்ச்சியாகவும் ஆனார்
5. எட்டுத் திக்குப் பாலர்களானார். அந்தத் திசைக் கூறுகளாகவும், அதன் எல்லையாகவும் ஆனார்
6. பரப்பு - மண்ணுலகம் ஆனார்.
7. மண்ணுலகைத் தாண்டி இருக்கும் சிவலோகமும் ஆனார்
8. பூலோகம் (பூமி) , புவலோகம் (பித்ரு லோகம்), சுவலோகம் (சுவர்க்கம்) இவையாகவும் ஆனார். (பூ:, புவ: சுவ:)
9. இந்த உலகங்களில் உள்ள வஸ்துக்களாய் ஆனார்
10. இந்த உலகங்கள் தோன்றுவதற்கு முன்னிருந்தே இருப்பவனும் ஆனார்.
11. தனித்து இயங்கமுடியா உலகங்களை (ஜடப் பொருட்கள், ஜட உலகங்கள் எனவும் சொல்வார்) எல்லாம் இயங்கவைப்பவனும் ஆனார்.

Thursday 31 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 9

நீராகி நீளகலந் தானே யாகி
..நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
..பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
..ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
..பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


நீராகி நீள் அகலம் தானேயாகி
..நிழலாகி நீள்விசும்பின் உச்சியாகிப்
பேராகிப் பேருக்கு ஓர் பெருமையாகிப்
..பெருமதில்கள் மூன்றினையும் எய்தானாகி
ஆரேனும் தன் அடைந்தோர் தம்மையெல்லாம்
..ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பாராகிப் பண்ணாகிப் பாடலாகிப்
..பரஞ்சுடராய்ச் சென்று அடிகள் நின்றவாறே


சிவபெருமான்:


1. நீராகவும், நீரினது தன்மையான ரசமாகவும் (சுவை) ஆனார்.
2. உலகின் நீளம், அகலம் ஆனார்
3. நிழல் - இந்த இடத்தில் ஒளியைக் குறிக்கும்
4. நீண்ட ஆகாயத்தின் உச்சியானார்
5. புகழும், புகழுக்குரிய பெருமையாகவும் ஆனார்
6. திரிபுரத்தை அம்பு எய்தி எரித்தவரும் அவரே
7. தன்னை அடைக்கலமாய் அடைந்தோரை ஆட்கொண்டு அருள வல்லவரும் அவரே
8. பார் = பூமி. பூமியாகவும், பூமியின் பொறுமை குணமாகவும் ஆனார்
9. இசைக்கப்படும் ராகமாகவும், அந்த ராகத்தில் பாடக்கூடிய பாடலாகவும் ஆனார்
10. மேன்மையான சுடரொளியாகவும் ஆனார்.

Tuesday 29 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 8

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
..அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
..நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
..புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
..செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


ஆவாகி ஆவினில் ஐந்தும் ஆகி
..அறிவாகி அழலாகி அவியும் ஆகி
நாவாகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி
..நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகிப்
பூவாகிப் பூவுக்கு ஓர் நாற்றம் ஆகிப்
..புக்குளால் வாசமாய் நின்றான் ஆகித்
தேவாகித் தேவர் முதலுமாகிச்
..செழுஞ்சுடராய்ச் சென்று அடிகள் நின்றவாறே


செழுஞ்சுடராய் எங்கும் பரவும் சிவபெருமான் இவ்வாறெல்லாம் ஆனார்:


1. ஆ=பசு.
2. பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் - பஞ்சகவ்யம் என்று சொல்கிறோமே, சிவபெருமானுக்குப் பிரியமான யக்ஞங்களில் பயன்படும் வஸ்துக்கள். (பால், பாலிலிருந்து கிடைக்கும் தயிர், தயிரைக் கடைந்து கிடைக்கும் வெண்ணையை உருக்கிய பின் கிடைக்கும் நெய், சாணம், கோமயம்).
3. அறிவு
4. வேள்வித் தீ (அழல்)
5. ஆவி = அவிசு. வேள்வித்தீயில் இடப்படும் அன்னம்.
6. நல்லனவற்றைப் பேசும் நாக்கு
7. நாவினால் பேசப்படும் பேச்சு
8. நாதம் (நாதத்தின் உள்ளுறையும் நாதனாகவும்)
9. வேதத்தின் உட்பொருள்
10. பூ
11. பூவின் வாசனை
12. பூவையும் வாசனையையும் பிரிக்க முடியாது. அந்த ஒன்றிய நிலையாகவும் இருக்கிறார். (புக்குளால் வாசம்)
13. தேவாகி = தே + ஆகி = தே = தேவர்கள்
14. தேவர்களின் தலைவன்

Monday 28 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 7

மாதா பிதாவாகி மக்க ளாகி
..மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
..கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
..புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
..அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே


பதம் பிரித்து:


மாதா பிதாவாகி மக்களாகி
..மறிகடலும் மால்விசும்பும் தானேயாகிக்
கோதாவிரியாய்க் குமரியாகிக்
..கொல்புலித் தோல் ஆடைக் குழகனாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
..புனைவார் பிறப்பறுக்கும் புனிதனாகி
யாதானும் என நினைந்தார்க்கு எளிதேயாகி
..அழல் வண்ண வண்ணர் தாம் நின்றவாறே


அழல் = நெருப்பு
நெருப்பின் வண்ணமுடைய சிவபெருமான்,


1. அன்னை, தந்தை, குழந்தைகளாகவும்,
2. ஒலி எழுப்பும் கடல், ஒலிவடிவமான ஆகாயம்
3. கோதாவிரி, குமரி முதலிய புனித நீர்நிலைகள் ஆகவும்
4. எதிரியைக் கொல்லும் வலிமையுடைய புலியினது தோலை ஆடையாய் அணியும், தோடுடைய செவியன் (குழகு = தோடு)
5. போதாய மலர் = உரிய காலத்தில் பூத்த மலர். அம்மலர்களால் அருச்சித்து வணங்குவோரின் பிறப்பறுக்கும் தூயவன்
6. 'எது நடந்தாலும் நடக்கட்டும். ஈசன் இருக்கிறார்' என்று நினைத்து இருப்போர்க்கு எளிதில் வந்து உதவும் பெருமான்


இவ்வாறெல்லாம் ஆகி நின்றார்.

Sunday 27 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 6

அங்கமா யாதியாய் வேத மாகி
..அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
..பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
..கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
..எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே


பதம் பிரித்த வடிவம்:


அங்கமாய் ஆதியாய் வேதமாகி
..அருமறையோடு ஐம்பூதம் தானேயாகிப்
பங்கமாய்ப் பலசொல்லும் தானேயாகிப்
..பால்மதியோடு ஆதியாய்ப் பான்மையாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னியாகிக்
..கடலாகி மலையாகிக் கழியுமாகி
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி
..எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே


எங்கும் பரவும் ஒளியான சிவபெருமான்:
1. அங்கம் - ஆறு அங்கமான - சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் - இவைகள்.
2. இவற்றின் ஆதி
3. நான்மறைகள்
4.அருமறை = அரிய மந்திரங்கள்
5. ஐந்து பூதங்கள், அவற்றின் தேவதைகள்
6. சொல்லப்படும் நல்ல சொற்கள், தீயோரைப் பழிக்கும் கொடுஞ்சொற்கள்
7. வெண்ணிலவு
8. உலகின் தோற்றம் (மூலம்), வினைகள் (பான்மை)
9. கங்கை, காவிரி ஆகிய நதி தேவதைகள், கன்னி = கன்னியாகுமரி (குமரி முனை)
10. கடல், மலை, கழி நிலம்
11. எங்கும் வியாபிக்கும் தலைவன்
12. ஏறு மேல் ஊர்ந்து வரும் செல்வன்

இவ்வாறாக அனைத்துமாய் ஆனார்.

Wednesday 23 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 5

தீயாகி நீராகித் திண்மை யாகித்
..திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
..தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
..இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே


பதம் பிரித்து:


தீயாகி நீராகித் திண்மையாகித்
..திசையாகி அத்திசைக்கு ஓர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வுமாகித்
..தாரகையும் ஞாயிறும் தண்மதியுமாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
..இரதங்கள் நுகர்வானும் தானேயாகி
நீயாகி நானாகி நேர்மையாகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்றவாறே


நெடிய சுடராய் நிமிர்ந்த சிவபெருமான்:


1.தீயின் வெம்மையாகவும், நீரின் குளிச்சியாகவும், நிலத்தின் திண்மையாகவும் ஆனார். (இங்கு இந்த மூன்று பூதங்களின் குணம் கூறப்பட்டுள்ளது)
2. எட்டுத் திக்குகளாகவும், அத்திசையின் தெய்வமாகவும் ஆனார்.
3. தாய், தந்தை, பற்றுதலுக்கு உரிய துணையாகவும் ஆனார்
4. வானில் காணப்படும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் இவைகளாகவும் ஆனார்.
5. காய், பழம், பழத்தின் சுவை, அந்தச் சுவையை உணருபவராகவும் ஆனார்
6. நீ (second person), நான் (first person) என்றும் ஆனார்
7. (நேர்மை = நுண்மை) நுண்ணிய பொருளாகவும் ஆனார்.

உருத்திர தாண்டகம் - பாடல் 4

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
..கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
..குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
..நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
..யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே

பதம் பிரித்து:

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
..கனவாகி நனவாகிக் கங்குலாகிக்
கூற்றாகிக் கூற்று உதைத்த கொல் களிறும் ஆகிக்
..குரைகடலாய்க் குரை கடற்கு ஓர் கோமானுமாய்
நீற்றானாய் நீறு ஏற்ற மேனியாகி
..நீள்விசும்பாய் நீள்விசும்பின் உச்சியாகி
ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி
..எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே

மேலே எழும்பும் சுடரான எம் அடிகள், சிவபெருமான்,

1. காற்று, மழை பொழியும் மேகம் ஆனார்
2. இறந்த, நிகழ், எதிர் என்று மூன்று காலம் ஆனார்
3. கனவு (ஸ்வப்னம்), நனவு (ஜாக்ரிதி) ஆகிய நிலைகள் ஆனார்
4. கங்குல் = இரவு. இரவானார்.
5. கூற்று = முடிவு இந்த இடத்தில். யாவும் சிவனிடமே முடிகின்றன.

இதில் இரவு, பின் முடிவு என்று அழகாக அப்பர் பெருமான் வடித்துள்ளார். இரவு = பிரளயம். முடிவு = பிரளயத்திற்குப் பின் ஒடுங்குதல்.

6. கூற்றுதைத்த - யமனை உதைத்த களிறு ஒத்த வீரன் ஆனார்
7. ஒலிக்கும் கடலாகவும், அந்தக் கடலின் தலைவன் - வருணனாகவும் ஆனார்
8. திருநீறு அணிந்தவனாகவும், அந்த நீற்றை அணிவதற்கு ஏற்ற மேனியனாகவும் ஆனார்.
9. பெரிய நீண்ட ஆகயமாகியும், அந்த ஆகாயத்தின் உச்சியாகவும் ஆனார்
10. அனைத்தையும் எற்பவனானார்
11. இடபத்தின் மேல் ஏறி ஊர்பவரும் ஆனார்.

உருத்திர தாண்டகம் - பாடல் 3

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
..காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
..புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
..சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே

கல்லாகிக் களறு ஆகிக் கானும் ஆகிக்
..காவிரியாய்க் கால் ஆறு ஆய்க் கழியும் ஆகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடும் ஆகிப்
..புரம் ஆகிப் புரம் மூன்றும் கெடுத்தான் ஆகிச்
சொல்லாகிச் சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகிச்
..சுலாவு ஆகிச் சுலாவுக்கு ஓர் சூழலாகி
நெல்லாகி நிலனாகி நீரும் ஆகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்றவாறே

கல் = மலை
களறு = விளை நிலம்
கான் = காடு
கால் ஆறு = வாய்க்கால் வழி (ஆறு = வழி)
கழி = கடல் அருகில் இருக்கும் இடம்

நெடுஞ்சுடராய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான்,
1. மலை, நிலம், காடு முதலியவைகள் ஆனார்
2. பெரிய காவிரி நதியாகவும், சிறிய வாய்க்கால் வழியாகவும், கடற்கரையாகவும் ஆனார்

இவ்வாறாக குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் எனும் நிலங்கள் வந்துவிட்டது.

3. புல், புதர், பூடு = செடி வகைகள்.
4. புரம் = நாடு, நகரம் ஆனார்.
5. அசுரர்களின் முப்புரங்களையும் அழித்தவனாகவும் ஆனார்
6. சொற்களாய் ஆனார். அந்த சொல்லின் பொருளாக ஆனார்
7. உயிர் மூச்சானார். சுலாவு = காற்று. போக்கும் வரவும் உள்ளது. (inhalation, exhalation)
8. அந்தக் காற்று நிலவும் சூழல் (வளிமண்டலம்) ஆனார் (atmosphere)
9. நெல் மணியாகவும், பயிரிடப்படும் நிலனாகவும், நிலத்தில் பாய்ச்சப்படும் நீராகவும் ஆனார்.

உருத்திர தாண்டகம் - பாடல் 2

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
..வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
..கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
..பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
..யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே

பதம் பிரித்து:

மண்ணாகி விண்ணாகி மலையும் ஆகி
..வயிரமுமாய் மாணிக்கம் தானே ஆகி
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியும் ஆகிக்
..கலையாகிக் கலைஞானம் தானே ஆகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகிப்
..பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி
எண்ணாகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி
..எழும் சுடராய் எம் அடிகள் நின்றவாறே

சிவபெருமான்:

1. மண், விண், மலை
2. வைரம், மாணிக்கம் முதலிய நவரத்தினங்கள்
3. கண், கண்ணின் மணி
4. பெண், பெண்ணுக்கு ஏற்ற ஆண்
5. பிரளயத்தின் போது எல்லா இடமும் நீரில் மூழ்கிவிடும். அப்போது சிவபெருமான் தனித்து ஓரிடத்தில் இருப்பார். அந்த இடமும் இவரே. காலத்திற்கும் தேசத்திற்கும் அப்பாற்பட்டவர்.
6. எண்ணமாகவும், எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடிய வடிவம் - எழுத்து. அந்த எழுத்தும் அவரே.

இதைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு விஷயம் தோன்றுகிறது. இந்த ஐயம், சிறு வயதிலிருந்தே இருந்தது. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்ற வாக்கியத்தில், எண் = numbers, எழுத்து = letters என்று கூறுவார்கள். சற்று விவாதித்தால், numbers ஐயும் நாம் எழுதுகிறோம். அதுவும் எழுத்துக்கள் தானே என்று கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க ஒரு வித பயம். இப்போது அந்த ஐயம் நீங்கிவிட்டது. நம் மனத்தில் தோன்றும் எண்ணம், அதனை எழுதும் வடிவம் ஆகியவை மிக முக்கியம் என்பதே அதன் பொருள்.

இன்னொரு வாதம். "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவார்". அப்போது எண் (numbers) அறிவித்தவன் என்று ஏன் சொல்வதில்லை என்று தோன்றியது. இப்போது அதற்கும் ஒரு நிறைவுப்புள்ளி. எழுத்து என்றாலே numbers மற்றும் letters என்று ஆகிவிட்டது அல்லவா?

உருத்திர தாண்டகம் - பாடல் 1

உருத்திர தாண்டகம் - நின்ற திருத்தாண்டகம்

வேதத்தில் சிவபெருமானை அனைத்துமாய் வர்ணித்து வணங்கும் பகுதியை ஸ்ரீ ருத்திரம் என்று அழைப்பர்.

திருநாவுக்கரசு ஸ்வாமிகள், தனது தேவாரத்தில் (6 ஆம் திருமுறை, 94 ஆம் பதிகம்), நின்ற திருத்தாண்டகம் என்று ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகத்தில், சிவபெருமானை இவ்வாறெல்லாம் ஆகி நின்றவாறே என்று ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் பாடியிருப்பார். அதனால் நின்ற திருத்தாண்டகம் என்று பெயர் பெற்றது. மேலும் ஸ்ரீ ருத்ர வர்ணனை இருப்பதால், உருத்திர தாண்டகம் என்றும் பெயர் பெற்றது.

இந்தப் பதிகத்தைப் படிப்பதால் ஸ்ரீ ருத்ரத்தைப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.

இப்போதெல்லாம், நிறைய சர்ச்சைகள் வருகிறது. பெண்கள் வேதம் ஓதலாம், கூடாது என்றெல்லாம். ஒரு சிலர் வேதம் என்பது இறைவன் புகழைப் பாடுவதே. அதனால் யாவரும் சொல்லலாம் என்கிறார்கள்.

பல சான்றோர்களின் கருத்து, காயத்ரி மந்திர உபதேசம் ஆகாமல் வேதத்தை ஓதுதல் கூடாது. குறிப்பாக பெண்கள் அந்த மந்திரத்தைக் கூறுதல் ஆகாது. மருத்துவ ரீதியாக பல இன்னல்கள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். வேத மந்திரங்களை சில வகையான ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல வேண்டும். அவ்வாறு கூறும் போது, கர்பப் பையில் சில உபாதைகள் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

இதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை என்று நாம் எதற்கு சண்டைப் போட்டுக் காலத்தை வீணடிக்க வேண்டும்?

வேத மந்திர சாரமான திருமுறைகள், திருப்புகழ், அபிராமி அந்தாதி என்று பல தோத்திரங்கள் இருக்க, யாவரும் (உரிய உபதேசம் ஆனவர்கள், ஆகாதவர்கள்) அவற்றைத் துதித்து இறைவனை வழிபடலாமே.

திருமுறையே திருமறை என்பதை உணர்ந்து அதனை முடிந்தவரை கற்று மகிழ்வோம்.

இனிவரும் பதிவுகளில், உருத்திர தாண்டகத்தைப் பார்ப்போம்.

நமச்சிவாய வாழ்க!

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
..இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
..ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
..பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
..நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே

பதம் பிரித்து:

இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி
..இயமானனாய் எறியும் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
..ஆகாசமாய் அட்டமூர்த்தி யாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
..பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி
..நிமிர் புன் சடை அடிகள் நின்ற வாறே

நிமிர்ந்த மென்மையான சடையை உடைய சிவபெருமான் நின்றவாறே இவ்வாறெல்லாம் ஆகிய லீலைகள் பெரும் வியப்பிற்குரியது:

1. நிலம், நீர், அனைத்தையும் வீசி எறியக் கூடிய காற்று, தீ, ஆகாசம் என்னும் ஐந்து பூதங்கள்.
2. திங்கள் (சந்திரன் - மனம்), ஞாயிறு (சூரியன் - புத்தி) மற்றும் நம் அஹங்காரம்/ஆன்மா என்னும் இயமானன் (தலைவன்/எஜமானன்)
இந்த 5 + 3 = 8 எட்டும் அட்ட மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
3. பெருமை தரும் நலம், சிறுமை தரும் குற்றம்
4. பெண், ஆண் எனும் இருபாலர்கள்
5. பிறர் உருவும் = மற்ற தேவர்கள்
6. தம் உருவும் = தமது மூவகை மேனிகள் - அருவம், உருவம், அருவுருவம்
7. நேற்று, இன்று, நாளை

இருநிலன் = பெரிய நிலம் - பூமி
இயமானன் = பெரியவன் / தலைவன்
நெருநல் = நேற்று

சிவபெருமான் அட்ட மூர்த்தியாய், நன்மை, தீமையாய், ஆண், பெண், மற்ற தேவராய், காலமாய் ஆனவர்.
வளரும்...