Wednesday, 26 October 2016

நமச்சிவாயப் பதிகம்

ராகமாலிகை - ஆதி தாளம் 

1. காமாஸ்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

2. கல்யாணி:
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.

3. சரஸ்வதி:
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

4. ஷண்முக ப்ரியா:
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

5. சாமா:
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.

6. அடாணா:
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

7. ரஞ்சனி:
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.

8. சஹானா:
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

9. ஹிந்தோளம்:
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

10. சுருட்டி:
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Tuesday, 25 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 10

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயபத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே

பொருள்:

மாப்பிணை தழுவிய - மாப்பு இணை தழுவிய. மாப்பு - மான் குட்டி
பூப்பிணை திருந்தடி - பூ பிணைந்த திருவடி
நாப்பிணை தழுவிய - நா - நாக்கு. நாவினில் நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தினை வைத்த அடியார்கள்.

மானைக் கையில் ஏந்தியவானும், மாதினை (பெண்) ஒரு பாகத்தில் கொண்டவனும்,   மலர் மாலைகள் சார்த்தப் பட்ட திருவடிகளைக் கொண்டவனுமான சிவனை, மனங்கனிந்து கைதொழுது, நாவில் நமச்சிவாய பதிகத்தை கொண்டு அவனைத் துதிப்போர்க்கு எவ்வித துன்பமும் இல்லை.

பாடல் கேட்க:

ராகம் - சுருட்டி
தாளம் - ஆதி


Check this out on Chirbit

Thursday, 20 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 09

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்    
நன்னெறி யாவது நமச்சி வாயவே

பொருள்:

முன்னெறி - முதல் நெறி / தலைசிறந்த வழி
நெறி - வழி.
சிவபெருமான் காட்டிய அவரின் நெறியே சிறந்த வழியாகும். அந்த வழியை தேர்ந்தெடுத்தோமானால், முக்திப் பெறுவது உறுதி (திண்ணம்).

அவ்வாறு, அந்த நெறியை தேர்ந்தெடுத்து, அப்பிரானை அடைந்தவர்களுக்கு, நல்ல வழியாக துணை நின்றது, நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமே ஆகும்.

பாடல் கேட்க:
ராகம் - ஹிந்தோளம்.
தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Monday, 17 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 08

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே

பொருள்:
இல்லத்தில் ஏற்றும் விளக்கானது, வீட்டில் உள்ள இருளை நீக்க வல்லது.
ஆனால் நமச்சிவாய என்னும் மந்திரம், சொல்லின் (வேதத்தின்) அகத்தில் (உள்ளே) விளங்குவதாகும். சோதி நிறைந்தது. தேஜஸ் உடையது. பலரும் காணக்கூடிய பிரகாசம் கொண்டது. நல்லனவற்றை அருளக்கூடியது. நல்லவற்றுள்ளே குடிகொள்வது.

பாடல் கேட்க:
ராகம்: சஹானா
தாளம் - ஆதி

Check this out on Chirbit

Sunday, 16 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 07

வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஒடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே

பொருள்:

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

வீடினார் - வீட்டுப் பேறு அடைந்தனர்.
உலகினில் - உலகு இனி இல் (இல்லை) என்று உலகப்பற்றை விட்டனர்.

அதாவது, உலகம் இனி இல்லை என்று பற்றை விட்ட, சிறந்த தொண்டர்கள், வீடுப் பேற்றினை அடைந்தனர்.

அடியேனும், அவர்களோடே சேர்ந்து, அவர்கள் சென்ற வழியே சென்றேன். எம்பெருமானின் உருவை, அகக்கண்ணில் கண்டு மகிழ்வுற்றேன்.

நான் திருவைந்தெழுத்தை (நமசிவாய) நாடினேன். என்னையும் அந்தத் திருவைந்தெழுத்து நாடிற்று.

பாடல் கேட்க:

ராகம் - ரஞ்சனி
தாளம் - ஆதி

Check this out on Chirbit

Friday, 14 October 2016

நமிச்சிவாயப் பதிகம் - 06

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே

பொருள்:

சலமிலன் - சலம் இலன் - சலனங்கள் இல்லாதவன்.
சங்கரன் - நன்மை செய்யும் கரம் கொண்டவன்.

சலனமில்லாத, சங்கரன், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே நன்மைகள் செய்வார். தன்னைச் சாரா நாத்திகர்களுக்கு (வேதத்தை த்வேஷிப்போர்க்கு) நன்மைகள் செய்ய மாட்டார்.

சிவனைச்சார்ந்தவர்கள், எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவரவர்க்கு எவ்வளவு நன்மை தர முடியுமோ அவ்வளவு நன்மைகளைக் கொடுப்பது, நம சிவாய என்ற ஐந்தெழுத்து.

பாடல் கேட்க:
ராகம் - அடாணா, தாளம் - ஆதி.


Check this out on Chirbit

Thursday, 6 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 05

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்  
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி 
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே 

பொருள்:

வெந்த நீறு அருங்கலம் விரதிகட்கு எலாம் - வெந்த நீறு - திருநீறு (அ) விபூதி. விரதம் மேற்கொள்பவர்க்கு அணிகலன், திருநீறு.

அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் - அந்தணர்களுக்கு அணி, அருமையான நான் மறை (வேதம்) மற்றும் அதன் அங்கங்கள் ஆறு (சிக்ஷை, கல்பம் , வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம்).

திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி - திங்கள் - சந்திரன். நிலவுக்கு அணிகலன், சிவபெருமானின், நீண்ட முடி.

நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே - நம் அனைவருக்கும் அணிகலன், நமசிவாய என்னும் திரு ஐந்தெழுத்தே ஆகும்.

பாடல் கேட்க:
ராகம் - ஸாமா, தாளம் - ஆதி 

Check this out on Chirbit