Friday 30 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 04

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே

பொருள்:
இடுக்கண் பட்டு இருப்பினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளினாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே

இடுக்கண் - துன்பம். எவ்வளவு துன்பத்தில் கிடந்தாலும், நம்பெருமான் சிவனை விட்டு அகன்று, வேறொருவரைப் பார்த்து, "நீங்கள் என் துன்பத்தை போக்குகிறீர்களா?" என்று கேட்க மாட்டோம். சிவன் அவ்வாறு நம்மை விடமாட்டார்.

மலையின் அடியில் மாட்டிக்கொண்டு தவித்தாலும், சிவபெருமானின் அருள், நம் நடுக்கத்தை கெடுத்துவிடும். அந்த பஞ்சாக்ஷர மந்திரம் அப்படிப்பட்ட மகிமை வாய்ந்தது.

பாடல் கேட்க:
ராகம்: ஷண்முகப்ரியா, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Thursday 29 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 03

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

பொருள்:

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
- வானின் உயரத்திற்கு விறகுகள் அடுக்கி வைத்தாலும், அதனை உண்ணும் விதமாக ஒரு தீப்பொறி சென்றால், அனைத்தும் எரிந்து சாம்பாலாகி விடும்.

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்ச்சிவாயவே
- அதுபோல, இவ்வுலகினில் நாம் செய்த பாவங்கள் - வானளாவ அடுக்கிய விறகுகள். அப்பாவத்தை எரித்து அழிக்கும் தீப்பொறி - நமசிவாய என்னும் ஐந்தெழுத்தாகும்.

பாடல் கேட்க:
ராகம் - சரஸ்வதி, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Wednesday 28 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 02

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே

பொருள்:

அருங்கலம் - ஆபரணம் அல்லது உயர்வு/பெருமை

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை - பூக்களுக்கு ஆபரணம் போன்றது, விரிந்த இதழ்கள் கொண்ட தாமரை.

ஆவினுக்கு அருங்கலம் அரனஞ்சாடுதல் - ஆ - பசு. பசுவிற்கு உயர்வு, இறைவன் அபிஷேகத்திற்கு அது கொடுக்கும் பால்.

கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது - கோ - அரசன். கோட்டம் - வளைவு. அரசனுக்கு அழகு, நீதி தவறாமல் நிற்பது. எதற்காகவும் நீதியிலிருந்து வளைந்து செல்லக்கூடாது.

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே - நம் நாவிற்கு ஆபரணம், நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரம்.

பாடல் கேட்க;
ராகம் - கல்யாணி, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

Tuesday 27 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 01

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பொருள்:

சொற்றுணை வேதியன் - வேதத்தினை அறிய உதவும் (துணையாக) விளக்கமாக (பாஷ்யம்) இருப்வன் சிவபெருமான்.

சோதி வானவன் - எங்கும் பரவி ஒளிரும் சோதி வடிவானவன்.

பொற்றுணைத் திருந்தடி - பொற்றுணை - பொன் போன்ற, ஈடு இணையில்லா அல்லது அந்த திருவடிக்கு நிகர் அதுவே (இணையடிகள்)

பொருந்தக் கைதொழ - நாம் மனம் பொருந்தி கைதொழ, கைகூப்ப

கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் - கல் தூண் ஒன்றை நம்மோடு கட்டி, கடலில் நம்மை வீசி எறிந்தாலும்,

நற்றுணை ஆவது நமச்சிவாயவே - நமக்கு நல்ல துணையாக வருவது, நம்மைக் காப்பது நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரம்.

அப்பர் பெருமானை, சமணர்கள் கல் தூணோடு சேர்த்துக் கட்டி, கடலில் பாய்ச்சினார்கள். அவர் நமசிவாய மந்திரத்தின் துணைக்கொண்டு, பாதுகாப்பாக  கரை ஒதுங்கினார். சைவத்தை நிலைநாட்டினார். அந்த இடமே திருப்பாதிரிப்புலியூர்  எனப்படும் கடலூர் ஆகும். இப்பதிகத்தை பாடி அவர் கரைசேர்ந்தார் என்பது வரலாறு.

பாடல் கேட்க;
ராகம் - கமாஸ், தாளம் - ஆதி

Check this out on Chirbit